அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையத்தில் ஆபத்தான நிலையில் மேநீர் தேக்கத்தொட்டி: புதிதாக அமைக்க கோரிக்கை

அணைக்கட்டு: அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மேநீர் தேக்கத்தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணைக்கட்டு ஒன்றியம் மருதவல்லிபாளையம் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மருதவல்லிபாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே மேநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. தொடர்ந்து, ஆழ்துளை கிணறுகளில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேநீர் தேக்க தொட்டியின் அடிப்பகுதி, மேல் பகுதி மற்றும் தூண்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் குடிநீர் தொட்டியின் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து குடிநீரில் கலப்பதால், வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரும் மாசடைந்து உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த ேமநீர் தேக்கதொட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் பயணிகள் நிழற்கூடம் அருகே இருப்பதால் பயணிகளும், பொதுமக்களும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே பெரிய அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க ஆபத்தான நிலையில் உள்ள மேநீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதியதாக கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

Related posts

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல் நீர்வரத்து சரிவு: பரிசல் இயக்க அனுமதி

பொது இடங்களில் கட்டிட கழிவுகளை கொட்டினால் அபராதம்