அணைகள் பாதுகாப்பு சட்டம் எதிர்த்து திமுக வழக்கில் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மாநிலங்களவையிலும்  நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற  ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் ஒன்றிய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஏற்பட்டுள்ள இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று  கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்  பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு  வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, மாநில அரசின் உரிமையை பறிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுபோன்று சட்டத்தை கொண்டுவர எந்த விதிகளும் இல்லை என்று வாதிட்டார். ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் இந்த வழக்கில் பதில் தர அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, நீதிபதிகள், இந்த வழக்கில் ஒன்றிய அரசு 3 வாரங்களுக்குள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை