டெல்லி டெஸ்ட் : ஆஸி. 262 ரன்களுக்கு ஆல் அவுட்
கருத்துகள்
மாற்றம் செய்த நேரம்:3/23/2013 12:59:36 PM
புதுடெல்லி: இந்திய அணியுடனான 4வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய சுழற் பந்துவீச்சாளர் அஷ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் மைக்கேல் கிளார்க்குக்கு பதிலாக ஆஸி. அணியின் கேப்டனாக ஷேன் வாட்சன் பொறுப்பேற்றார். இந்திய அணியில் அறிமுக வீரராக அஜிங்க்யா ரஹானே சேர்க்கப்பட்டார். டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக கோவன், வார்னர் களமிறங்கினர். வார்னர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் வேகத்தில் கோஹ்லி வசம் பிடிபட, ஆஸி. அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து கோவன் , ஹியூஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 67 ரன் சேர்த்தது. ஹியூஸ் 45 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து கோவன் 38 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் ஷேன் வாட்சனும் அதிக நேரம் நீடிக்கவில்லை. அவர் 17 ரன் மட்டுமே எடுத்து ஜடேஜா சுழலில் விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஸ்டீவன் ஸ்மித் ஒரு முனையில் போராட வேட் 2, மேக்ஸ்வெல் 10, ஜான்சன் 3 ரன்னில் வெளியேறினர். ஸ்மித் , சிடில் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது.
ஸ்மித் 46 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ரஹானே வசம் பிடிபட்டார். ஆஸி. அணி விரைவில் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிடில் , பேட்டின்சன் ஜோடி உறுதியுடன் போராடியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸி. 98 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்துள்ளது. சிடில் 47 ரன், பேட்டின்சன் 11 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய சுழற் பந்துவீச்சாளர் அஷ்வின் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!