மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் ஜாமீன் கேட்டு 2 கைதிகள் மனு
கருத்துகள்
புதுடெல்லி: ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதான 2 பேர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டாள். அவளை ஒரு சிறுவன் உட்பட 6 காமக் கொடூரர்கள் இரும்பு கம்பியால் அடித்து சாய்த்து பலாத்காரம் செய்து, பஸ்சில் இருந்து தூக்கி வீசினார்கள்.இதனால் உயிருக்கு போராடிய அந்த மாணவியை டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் அவரது நிலைமை கவலைக்கிடமானது. எனவே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் கொண்டு சென்றனர். அங்கு 3 நாட்களே சிகிச்சை பெற்ற மாணவி பரிதாபமாக 29ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பஸ் டிரைவர் ராம் சிங், அவரது தம்பி முகேஷ், அவர்களின் நண்பர்களான வினய் சர்மா, அக்ஷய் குமார், பவன் குப்தா மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சிறுவன் மட்டும் சிறார் நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர்களுக்கான சீர் திருத்தப் பள்ளியில் காவலில் வைக்கப்பட்டான். மற்ற 5 பேரும் திகார் திரையில் காவலில் வைக்கப்பட்டனர்.இந்த நிலையில் இவர்கள் மீதான வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு டெல்லி விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் செசன்ஸ் நீதிபதி யோகேஷ் கன்னா முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே திகார் சிறையில் இருந்த டிரைவர் ராம் சிங், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனால் அவன் மீதான வழக்கு விசாரணை கைவிடப்பட்டது.இந்த வழக்கில் கைதாகியுள்ள முகேஷ் சார்பில் விரைவு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில், ‘இதே வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அவர், முகேஷின் அண்ணன். அவரது இறுதி சடங்குகள் இந்த மாதம் 25, 26 ஆகிய நாட்களில் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் நடக்கிறது. அந்த இறுதி சடங் கில் கலந்து கொள்ள வசதியாக முகேஷுக்கு 15 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.அதேபோல கைதாகி திகார் சிறையில் இருக்கும் வினய் சர்மாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில், ‘வினய் பி.ஏ. பட்டப்படிப்பு தேர்வு எழுத வேண்டியதுள்ளது. எனவே அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த 2 ஜாமீன் மனுக்களையும் விசாரணைக்கு நீதிபதி யோகேஷ் கன்னா ஏற்றுக் கொண்டார். இந்த வழக்கில் இதுவரை 59 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒருவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதையும் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 60 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!