ஹை ஹீல்ஸ் ஹைய்யய்யோ!
மாற்றம் செய்த நேரம்:3/20/2013 2:50:57 PM
ஒரு காலத்தில் உயரத்தைக் கூட்டிக்காட்ட பெண்கள் அணிந்த ஹை ஹீல்ஸ், இன்று ஃபேஷன் அடையாளம்! ஹீல்ஸ் அணிகிற போது, அணிகிறவரின் தோற்றமும், நடையும் ஸ்டைலாக மாறிப் போவது எத்தனை உண்மையோ, அதே அளவு, அவர்களது உள் உறுப்புகளிலும் மாற்றம் உண்டாகி, எலும்புகள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதும் உண்மை!
‘‘சாதாரண காலணிகள் அணிந்து நடக்கும் போது, நம் உடல் எடையால் உண்டாகும் புவி ஈர்ப்பு சக்தி, உடலின் நடுப்பகுதியில்தான் மையம் கொண்டிருக்கும். குதிகால் உயரமாக உள்ள காலணிகளை அணியும் போது, நம் உடலின் எடை, நம்மையும் அறியாமலேயே முன்னோக்கித் தள்ளப்படுகிறது. இதனால் நாம் நடக்கும் போது, நம் மூட்டுகளில் செல்லும் விசைகள் சமமாக இல்லாமல், சில பகுதிகளில் அதிக அழுத்தத்துக்கு ஆளாகின்றன.
இதன் விளைவாக பாதம், முழங்கால், மூட்டு, முதுகுப் பகுதிகளில் வலி வரலாம். தவிர பேலன்ஸ் இழந்து கீழே விழும்போது, மூட்டு இணைப்பு நார் அறுந்து போகலாம். அது மட்டுமின்றி, ஹை ஹீல்ஸ் அணியும்போது, மூட்டில் செல்லும் விசையானது, சமமாகச் செல்லாமல், 30 சதவிகிதம் மூட்டின் உள் பகுதியில் அதிகமாகச் சென்று, மூட்டுத் தேய்மானத்திற்கு வழி வகுக்கலாம்...’’ - அதிர வைக்கிற தகவலுடன் பேச ஆரம்பிக்கிறார் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கே.என். சுப்ரமணியம்.
‘‘மூட்டில் ஏற்படும் தேய்மானம் கிட்டத்தட்ட நிரந்தரமானது. மூட்டில் உள்ள ஜவ்வு ஒரு முறை தேய்மானமடைந்தால், மறுபடி வளர்ச்சி அடைவதில்லை. மூட்டுத் தேய்மானத்தைப் பொறுத்த வரை, வலி தீவிரமாக இருந்தால், மூட்டுமாற்று சிகிச்சை மட்டுமே தீர்வு என்கிற நிலை நிலவுகிறது. தொடர்ந்து ஹை ஹீல்ஸ் அணிவதால், பாதங்களில் கால் ஆணிகளும், பாதங்களின் சிறுமூட்டுகளில் வலியும் ஏற்படலாம். மூட்டில் உள்ள குறுத்தெலும்பும் மூட்டு இணைப்பு நாரும்கூட பாதிக்கப்படலாம்.
ஹை ஹீல்ஸ் அணிகிற சிலருக்கு, முதுகினுள் உள்ள ஜவ்வில் அழுத்தம் அதிகமாகி, முதுகுவலி வரலாம்...’’ - எச்சரிக்கிற டாக்டர் சுப்ரமணியம், இப்படி பல பாதிப்புகளை ஏற்படுத்துகிற ஹை ஹீல்ஸ் காலணிகளால் ஒரே ஒரு நன்மையும் உண்டு என்கிறார். ‘‘குதிகால் உள்ள இணைப்பு தசைநாரில் வீக்கம் ஏற்பட்டால், மிதமான உயரமுள்ள காலணிகள் அணியும்போது, குணம் தெரியும்.
அதாவது, பிரச்னை இருப்பவர்களுக்குத்தான் இந்த பரிந்துரையே தவிர, மற்றவர்கள், என்றோ ஒரு நாள், ஏதோ முக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், அதுவும் சில மணி நேரம் மட்டும் ஹை ஹீல்ஸ் அணியலாம். அதை நிரந்தர வழக்கமாக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது!’’
நடப்பது எப்படி?
கொஞ்சமாக ஹீல்ஸ் வைத்த காலணிகளைத் தேர்ந்தெடுக்கலாம். கூரிய முனைகள் கொண்ட ‘பாயின்ட்டட்’ ஹீல்ஸை தவிர்ப்பது மிகவும் நல்லது.
உட்கார்ந்திருக்கும் நேரங்களிலும் ஹை ஹீல்ஸ் காலணியுடனேயே இருக்க வேண்டாம். காலணிகளைக் கழற்றிவிட்டு பாதங்கள், தரையில் சமதளத்தில் இருக்குமாறு வைத்திருக்கலாம். ஹை ஹீல்ஸ் அணிந்தபடி நீண்ட தூரம் நடப்பதும் நல்லதல்ல. வீட்டில் இருக்கும்போது, வெறுங்கால்களுடன் இருப்பதே சிறந்தது. முடிந்தால் அடிக்கடி கடற்கரை மணலில் வெறுங்கால்களுடன் நடக்கலாம்.
இப்படி இருந்த நீங்க... இப்படி ஆயிடுவீங்க!
சமதளக் காலணிகளை அணியும்போது, உங்கள் உடல் நேராக இருக்கும். ஹை ஹீல்ஸ் அணியும்போது, உங்கள் மார்பகப் பகுதியும், அடிமுதுகுப் பகுதியும் முன்னோக்கித் தள்ளப்படும். இடுப்புப்பகுதி பின்னோக்கித் தள்ளப்படும். முழங்கால்களில் அழுத்தம் உண்டாகும். உயர்ந்த காலணியின் உயரத்துக்கேற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்ள கணுக்கால் தசைகள் சுருங்கி, இறுக்கமாகும். அதன் விளைவாக உங்கள் தோற்றம் மாறிப் போகும்.






















