Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

டீன் ஏஜ் பெண் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

மாற்றம் செய்த நேரம்:3/20/2013 2:24:08 PMHow to deal with teenage female children?


MORE VIDEOS

டீன் ஏஜ் பெண் குழந்தைகளை அணுகுவது பற்றி முந்தைய இதழ்களில் ஏற்கனவே பேசியிருக்கிறோம். பெண் குழந்தைகளைப் பெற்ற பல  அம்மாக்களின் வேண்டுகோளை ஏற்று, இன்னும் சற்று விரிவான அணுகுமுறை, ஆலோசனைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  தவழ்ந்து  கொண்டிருந்த குழந்தை திடீரென நடக்க ஆரம்பித்த தருணம்...

‘அம்மா’ என்றழைத்த முதல் மழலைக் குரல்...
அழுகையுடன் அழகாக பள்ளி சென்ற அந்த முதல் நாள்...
இப்படி குழந்தையின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் தாய்க்கு ரசனைக்குரியதே.

நேற்று வரை ‘பார்பி டால்’ வைத்து குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த மகள்,
திடீரென இளம்பெண்ணாக, பருவ வயதுக்குரிய உடல், மன மாற்றங்களுடன் வளர்ந்து நிற்கும் போது, அத்தனை ரசிப்பும் திடீரென ஒரு நாள் தவிப்பாக  மாறலாம். அவள் வளர்ந்து, அழகுடன் மலர்வதைக் கண்டு பூரிப்படையும் தாய் மனம் அதே நேரத்தில் அவளின் வித்தியாசமான நடவடிக்கைகளினால்  திகிலடையும்.  

‘‘ரொம்ப புத்திசாலித்தனமா எல்லா விஷயமும் பேசுவா. ஆனா, சில விஷயங்களை நான் சொன்னா  கேட்கவே மாட்டேங்கறா...’’ என என்னிடம்  புலம்பினார் ஒரு தாய்.

‘‘என் பொண்ணு டீன் ஏஜ்ல அடியெடுத்து வச்சாலும் வச்சா... ஒவ்வொரு நாளும் எனக்கு அவ சிபிஐ விசாரணை நடத்துற மாதிரி இருக்கு. அவ  கேட்கற கேள்விகளும், அவளோட நடவடிக்கைகளும், ‘நான் நல்ல அம்மாதானா’ன்னு என் மேலேயே எனக்கு சந்தேதகத்தை உண்டாக்குது’’ எனப்  புலம்பித் தீர்த்தார் இன்னொரு அம்மா.

டீன் ஏஜ் மகள் வைத்திருக்கிற பெரும்பாலான அம்மாக்களின் நிலை இதுதான். எப்போதும் எதற்கெடுத்தாலும் மகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டு  நிற்கிற அம்மாக்கள் ஏராளம். உங்கள் மகள், சிறு வயதில் எல்லாவற்றையும் உங்களுடன் பகிர்ந்திருப்பாள். அவள் வயதுப் பிள்ளைகளுடன் சண்டை  போட்டுக் கொண்டு உடனே உங்களுடன் வந்து அதைப் பற்றி அழுது புலம்பித் தீர்த்திருப்பாள். ஆனால், வளர்ந்த பின், எல்லாமே ரகசியம்தான்!

“வெளியே போயிட்டு வீட்டுக்கு வந்ததும் நேரா அவ ரூமுக்கு போய் கதவை மூடிக்கிறா. நான் எதைக் கேட்டாலும், ‘எப்போ பாத்தாலும் எதாவது  கேள்வி கேட்டுட்டே இருப்பியா’ன்னு கத்திட்டு போறா. எப்போதும் ‘உம்’முன்னு மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிறா’’ என்று புலம்பினார் இன்னொரு தாய்.
அம்மாக்களுக்கும் ‘டீன் ஏஜ்’ பெண்களுக்கும் இடையே உண்டாகும் இந்த விரிசலுக்கு பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்களைப் புரிந்து  கொண்டு, அவர்களைக் கைப்பிடித்து சரியான பாதையைக் காட்ட வேண்டிய பொறுப்பு உங்களுடையதே!

டீன் ஏஜில் அந்த வயதுக்கே உரிய குழப்பங்கள், நம்பிக்கைகள், ‘சரியா? தவறா’ என்கிற கேள்விகள், தயக்கங்கள் என மன அழுத்தத்தை உண்டாக்கும்  மனநிலையில் இருப்பார்கள் பெண் குழந்தைகள். ஆனால், பல அம்மாக்கள் அதைப் புரிந்து கொள்வதில்லை.  எப்போதும் புத்தகமும் கையுமாக,  படிப்பையும் எதிர்காலத்தையும் பற்றிய சிந்தனையில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு மட்டும்தான் ஸ்ட்ரெஸ் வரும் என்றில்லை.

எல்லா பெண் குழந்தைகளுக்கும் சுரப்பிகள் சுரக்கும் ரசாயனங்களின் தாக்கத்தினாலும், அவர்களின் சுற்றுச்சூழலினால் விளையும் பயங்களினாலும்  சாதாரண விஷயங்கள் கூட அச்சுறுத்தலை உண்டாக்கி அவர்களுடைய எண்ணங்களிலும் நடவடிக்கைகளிலும் மாற்றத்தை உண்டாக்கும்.  இத்தருணத்தில் முக்கியமாக பள்ளி யிலிருந்தும் பெற்றோர்களிடமிருந்தும் வரும் எதிர்பார்ப்புகளும் வற்புறுத்தல்களும் அவர்களை அழுத்தும்போது  அவர்களால் தாக்குப் பிடிக்க முடிவதில்லை.

ஏழாவது, எட்டாவது படிக்கிற பிள்ளைகளுக்குக்கூட இன்று மனச்சுமைகள் ஏராளம். இதனால் வீடும் பள்ளியும் அவர்களுக்கு சிறைகளைப் போலவே  தோன்றும்.  ‘‘திடீரென பள்ளிக்கூடம் செல்ல மறுக்கிறாள்... அடிக்கடி லீவு போடுகிறாள்’’ என 10 வயது அனிதாவை அவளது பெற்றோர் என்னிடம்  அழைத்து வந்தார்கள். ‘‘ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்த அடுத்த நிமிஷமே நான் ஹோம் ஒர்க் பண்ண ஆரம்பிக்கணும். டியூஷனும் போகணும்.  வீட்டுக்கு வந்துட்டு ராத்திரி சாப்பாட்டு டைம் வரைக்கும் படிக்கணும்.

எனக்கு பயங்கரமா தலை வலிக்கும். டயர்டா ஆயிடுவேன். ஆனாலும் நோ எக்ஸ்கியூஸ். அம்மாவும் சரி... டீச்சரும் சரி இதை நான் செஞ்சே  ஆகணும்னு ‘டார்ச்சர்’ பண்றாங்க. அப்புறம் மிச்சமிருக்கிற நேரத்துல பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்னு எல்லாத்துக்கும் போகணும்... பீரியட்ஸினால்  வயிறு வேற வலிக்குது. யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க...’’ - இது அனிதா தரப்பு பதில்.

அனிதாவின் மன அழுத்தத்துக்கு யார் காரணம்?


பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளுக்கு பல சவால்கள் இன்று உண்டு. புதிய புதிய தேவைகள்... புதுப்புது சவால்கள் என பள்ளி இறுதியை  நோக்கி நகரும் பிள்ளைகளின் உலகத்தில் தினம் ஒரு அனுபவம். பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள், பள்ளியின் தேவைகள், தன் இயற்கைத் தவைகள்,  நண்பர்களின் தாக்கம், எதிர்கால சிந்தனை என பல  நிலைகளில் இவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.

இந்த அழுத்த நிலையின் காரணமாக இப்பெண்கள் ‘மூடி’யாக, எரிச்சலுடன், கோபமாக, யாரிடமும் பேசாத அமைதியாக, அதீத களைப்பாக, வலிகளை  உணர்வதாக, உடன் பிறந்தவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, செல்போனும் கையுமாக, ஹோம்ஒர்க் செய்வதிலிருந்து தப்பித்தவாறு,  ஒதுங்கியவாறு நடந்து கொள்ளலாம். பதின்ம வயதுப் பெண்கள் உடலளவில் வளர்ந்து விட்டாலும் மனதளவில் குழந்தைகள்தான்.

இந்த குழப்பமான பருவத்தில் உங்கள் ஆதரவு மிக அதிகமாக அவர்களுக்குத் தேவை. தன்னுடைய மன அழுத்தத்திலிருந்து விடுபட அவள் தன்  நண்பர்களுடன் அதிக நேரம் உரையாடலில் செலவழிக்கலாம். இது பெற்றோரால் அலட்சியம், திமிர், அன்பற்ற நிலை என பலவிதமாக தப்பர்த்தம்  செய்து கொள்ளப்படுகிறது. தங்கள் மேல் அன்பு குறைந்து விட்டது போன்றும், தங்களை விட்டு நண்பர்களே கதியென குழந்தை பிரிந்து போய் விட்டது  போன்றும் உணர்வார்கள்.

இதனால் அம்மாக்கள் பிள்ளையை நச்சரிப்பார்கள். பிள்ளைகளும் இதற்கு பதிலடி கொடுக்க... அங்கே ஒரு நச்சு வட்டம் உருவாகி விடுகிறது.  நம்பிக்கையும், நல்ல பேச்சு வார்த்தையும்தான் இந்தச் சூழ்நிலையில் உங்கள் மகளைத் தேற்றக்கூடிய விஷயங்கள். மகளின் ஒவ்வொரு கட்ட  வளர்ச்சியையும் நடவடிக்கையையும் குறுக்கு விசாரணை செய்கிற வக்கீல் மாதிரிப் பார்க்காமல், பாசிட்டிவாக பார்க்கப் பழகுங்கள்.

அவளின் குழப்பங்களையும் கஷ்டங்களையும் புரிந்து, உணர்ந்து அவளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருகிற வகையில் நடந்து கொள்ளுங்கள். இந்த  சில வருடங்களை நீங்கள் சரியாகக் கையாண்டு விட்டால், பிறகு உங்கள் அம்மா-மகள் உறவில் சிக்கல்களே வராது!

‘எல்லாமே போச்சு’, ‘என் பொண்ணு கைக்கு அகப்படாமே போயிட்டா’ என்றெல்லாம் புலம்புவதை நிறுத்தி விட்டு அவள் என்ன செய்தாலும் அவளை  அன்புடன் அரவணையுங்கள். என்ன நடந்தாலும் நீங்கள் அவளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என உணர்த்துங்கள். உங்கள் மகளின் உலகத்தில்  நீங்கள் ஒரு பாகமாக ஒன்றி விட்டால்தான், அவள் தவறு செய்யும்போது அவளை நீங்கள் கண்டித்தால் உங்களை மதித்து அவள் புரிந்து  செயல்படுவாள்.

குழப்பமான சூழ்நிலையில் தன்னம்பிக்கை தளரும் போது ‘நான் அம்மாகிட்டே பேசலாம்’ என்ற நம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் நீங்கள் அவளைக்  கையாண்டால் அவள் எப்பொழுதும் உங்கள் கைகளிலிருந்து நழுவ மாட்டாள்.

Access to the children of teenage girl already spoken in previous papers. Many mothers who have children at the request of a woman, a little more comprehensive approach, will share advice here. Suddenly the child began to walk tavalntu moment ...

செய்திகள்

Advertisement

மருத்துவம்


சமையல்

ஷாஹி துக்ரி என்னென்ன தேவை? பிரெட் ஸ்லைஸ் - 4, பால் - 3 கப், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், பச்சை ஏலக்காய் - ...

எப்படிச் செய்வது?எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, நன்கு அடிக்கவும். சிட்டிகை பச்சை கலர் சேர்த்துக் கலந்து, ஒரு தட்டில் கொட்டி, கிவி துண்டுகளால்  அலங்கரித்து, குளிர வைத்துப் பரிமாறவும். ...


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran