Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளித்து வாலிபர் சாதனை

பதிவு செய்த நேரம்:2013-03-23 10:08:56
MORE VIDEOS

கோவை,: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர்நாடி என்ற நிகழ்ச்சி இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நேற்று நடந்தது. இதில் நொய்யலை காப்போம் என்ற குறும்படம், நொய்யல் கோவையின் வாழ்வாதாரம் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. சிறுதுளி தலைவர் பாலசுப்பிரமணியம், அறங்காவலர் வனிதா மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, ராக் அமைப்பின் துணை தலைவர் பாலசுந்தரம், டாக்டர் சஞ்சய் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் தர்மபுரியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி கோவிந்தசாமி (29) பார்வையாளர்கள் முன்னிலையில்  ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தரையில் சாக்கை விரித்து கொண்டு, ஜட்டியுடன் குளிக்க துவங்கிய கோவிந்தசாமி , தண்ணீரை கொஞ்சம், கொஞ்சமாக உடம்பில் ஊற்றி நனைத்தார். பின்னர் உடல் முழுவதும் சோப்பு போட்டார். பிறகு தலையில் ஷேம்பு போட்டு தண்ணீரை ஊற்றினார். இப்படி 3 முறை சோப்பு போட்டும், 3 முறை ஷேம்பு போட்டும் தண்ணீரை சிக்கனமாக உடலில் ஊற்றி குளித்தார். ஒன்றரை லிட்டர் தண்ணீரில் ஊற்றி, உடலில் சோப்பு நுரை இல்லாதவாறு 10 நிமிடம் சுத்தமாக  குளித்து முடித்தார். கோவிந்தசாமி குளித்தை பார்த்து பார்வையாளர்கள் கை தட்டி பாராட்டினர். இது குறித்து கோவிந்தசாமி கூறுகையில், ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கு மேல் படிக்க வசதி இல்லாததால் ஆடு மேய்க்க சென்றேன். ஆடு மேய்க்கும் போது காட்டில் குடிக்க தண்ணீர் கிடைக்காது. இதனால் 2 லிட்டர் தண்ணீர் எடுத்து செல்வேன்.
அதை குடிக்க பயன்படுத்திய நான், வெயில் நேரத்தில் அந்த தண்ணீரை உடலில் ஊற்றி குளிக்கவும் செய்தேன். கிராமங்களில் குடிநீர் வீணாக ஓடும். இதை பார்த்து எனது மனத்திற்கு வேதனை ஏற்படுத்தியது. அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்தேன். பொதுமக்கள் மத்தியில் 3 லிட்டர் தண்ணீரில் குளித்து காட்டினேன். தொடர்ந்து 2 லிட்டர் தண்ணீரில் குளித்தேன். தற்போது ஒன்றரை லிட்டரில் குளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். வரும் காலத்தில் 1.200 லிட்டரில் குளிக்க பயிற்சி எடுத்து வருகிறேன். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்பேன். என்னுடைய சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்வதற்கு முயற்சி செய்து வருகிறேன் என்றார்.

மேலும் செய்திகள்

மேலும்

செய்திகள்

Advertisement



Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran