வாடகை வீடுகளுக்கு மவுசு...
பதிவு செய்த நேரம்:2013-03-23 09:38:43கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை சில காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட தொழில் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதில் பணியாற்றும் ஊழியர்கள் குடியேறிவருகின்றனர். அந்த வகையில் சென்னையை சுற்றி பல தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்கப்படுவதால் வாடகை வீடுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதுமட்டுமின்றி சிறந்த கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், முக்கிய சாலைகள் ஆகியவை இருந்தால் அவற்றின் அருகே வீட்டை வாடகைக்கு பிடித்து குடியிருக்க பலர் விரும்புகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் ஊழியர்களின், குறிப்பாக பெண் ஊழியர்களின் குடியிருப்புத் தேவையை பூர்த்தி செய்ய சில பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிலகம் அருகிலேயே தனி குடியிருப்புகளை ஏற்படுத்தி அவற்றை நீண்டகால குத்தகைக்கு கட்டுமான நிறுவனங்களிடமிருந்து பெறுகின்றன.
நகரின் மத்தியில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வாடகை குடியிருப்புகளுக்கு அதிக தேவை உள்ளது. இப்பகுதிகளில் ஆண்டுக்கு 8 முதல் 10 சதவீதம் அளவில் வாடகை உயர்த்தப்படுகிறது. சென்னை நகரில் ஜிஎஸ்டி சாலை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாடகைக்கு வீடுகளை எடுத்து குடியேற பலர் விரும்புகின்றனர். மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஸ்ரீராம் கேட்வே உள்ளிட்ட தொழில் வளாகங்களில் பணியாற்றுபவர்கள், பல்வேறு கல்வி நிறுவன ஊழியர்கள் இந்த பகுதியில் குடியிருக்க பெரிதும் விரும்புகின்றனர்.
இப்பகுதிகளில் 2 படுக்கையறை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளுக்கு ரூ 15 ஆயிரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை வாடகை கிடைக்கிறது. பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றும் அதிகாரிகள் நிறுவனங்களின் அருகிலேயே குடியிருக்கவே விரும்புகின்றனர்.
அதேபோல சுமார் 7 ஆயிரம் அயல்நாட்டினர் பல்வேறு பணிகளுக்காக சென்னையில் குடியேறியுள்ளனர். அவர்கள் திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர், வால்மீகி நகர், கிழக்கு கடற்கரை சாலை அருகே கடலோரப் பகுதிகள் ஆகிய இடங்களில் குடியிருக்க பெரிதும் விரும்புகின்றனர். தங்கள் பிள்ளைகள் படிக்க சர்வதேச பள்ளி, உலகத் தரத்திலான வசதிகளுடன் கூடிய வீடுகளை இவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே இத்தகையவர்களுக்காக வெளிநாட்டு தூதரகங்கள் நவீன வசதிகளுடன் கூடிய மாளிகைகளை வாடகைக்காக தேடி வருகின்றன. அவை ரூ 2.5 லட்சம் வரை கூட வாடகை தர தயாராக உள்ளன.










