தாய் கண் முன் சோகம் கார் சக்கரத்தில் சிக்கி 6 மாத குழந்தை பலி
பதிவு செய்த நேரம்:2013-03-23 09:38:30தண்டையார்பேட்டை, : ரிவர்ஸ் வந்த கார் சக்கரத்தில் சிக்கி தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த 6 மாத குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது. தாய் கண் முன்னே நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பாரிமுனை 2வது கடற்கரை சாலையோரம் பிளாட்பாரத்தில் வசிப்பவர் பூபதி (25), ரிக்ஷா தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (22). இவர்களது 6 மாத குழந்தை மைக்கேல் ராஜ்.
நேற்று முன்தினம் பூபதி சவாரிக்கு சென்றிருந்தார். சித்ரா மாலையில் அங்கிருந்த பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார். குழந்தை மைக்கேல் ராஜ், தாய் சித்ராவின் அருகில் தவழ்ந்து விளையாடி கொண்டிருந்தது. அங்கு பிளாட்பாரத்தின் அருகே ஒரு கார் நின்று கொண்டிருந்தது.
சித்ரா அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென பிளாட்பாரத்தை விட்டு இறங்கி காரின் பின் பகுதிக்கு சென்றுள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்தில் அங்கு வந்த டிரைவர் காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். இதில் கார் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய குழந்தை கதறியது.
சத்தம் கேட்டு சித்ரா மற்றும் அங்கிருந்தவர்கள் குழந்தையை தூக்க ஓடி வந்தனர். அதற்குள் கார் சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கியது. இதில் குழந்தை சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது. தன் கண் முன்னே குழந்தை இறந்ததை பார்த்த சித்ரா கதறி துடித்தார். விபத்துக்கு காரணமான டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பிவிட்டார்.
இதுகுறித்து யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவரை தேடுகின்றனர். தாய் கண்முன் குழந்தை கார் சக்கரத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதத்துக்கு முன்பு மண்ணடியில் பிளாட்பாரத்தில் வசித்தவர்களின் குழந்தை ஒன்று கார் ஏறி இறந்தது குறிப்பிடத்தக்கது.
சாலையோரத்தில்
தங்குவதால் விபத்து
பாரிமுனை பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் பலர் வேலை செய்கின்றனர். ஒரு சிலர் பாரிமுனை பகுதியில் உள்ள தெருக்களின் ஓரங்களில் தங்கி இருந்து, சாலையிலேயே தூங்குவது, சமைப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் நிகழ்கிறது. இப்படிப்பட்ட சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர்.










