SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அபூர்வ வடிவில் லலிதா செல்வாம்பிகை

2022-01-24@ 13:57:48

திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரதான ஊர் செஞ்சி. இங்கிருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில்  உள்ளது ‘செல்லப் பிராட்டி’ என்னும் கிராமம். இக்கிராமத்தில்தான், குடிகொண்டு அருள் பாலித்துவருகிறாள் அருள்மிகு லலிதா செல்வாம்பிகை. இந்த அன்னையின் மூலவர் வடிவத்துக்கு உருவம் இல்லை. முற்றிலும் வித்தியாசமான மூலவர் விக்கிரகம் இது. வேறெங்கும் காணமுடியாதது.

மூலவராகப் போற்றி வணங்கப்படும் இந்த ‘லலிதா செல்வாம்பிகைக்கு’ உருவமே இல்லை. செவ்வக வடிவத்தில் உயரமான ஒரு கருங்கல் தான் மூலவராகக் காட்சி தரும் இந்த அன்னை நான்கடி  உயரம், இரண்டடி அகலம், நான்கு அங்குல தடிமனுடன் காணப்படும் ஒரு கற்பலகைதான் அன்னை லலிதா செல்வாம்பிகை. பல நுற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தக் கருங்கல் அமைப்பைத் தான், அன்னையின் வடிவமாக ‘செல்லப்பிராட்டி’ கிராமத்தவர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

மூலவராக விளங்கும் இந்தக் கற்பலகையின் சிறப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. மூன்று திவ்ய சக்தி களின் சொரூபம். தேவியின் அம்சங்கள் அனைத்தும் இதில் ஐக்கியமாகி உள்ளன. இந்தக் கற்பலகையில் 12 சதுரக் கட்டங்கள் அமைந்துள்ளன. அவற்றில் பீஜாட்சர எழுத்துகள் உள்ளன. தெய்வசக்தியான பிரம்ம சக்தி, ஓவிய வடிவில் இந்தக் கற்பலகையில் காணப்படுகிறது. இதன் மேலே, வலது பக்கம் சூரியனின் வடிவமும், இடது பக்கம் சந்திரனின் வடிவமும், நடுவே திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற இந்த கற்பலகையை பிரதிஷ்டை செய்தவர் ‘‘ரிஷ்யசிருங்கர்” என்னும் மகரிஷியாவார்.

இவர்தான் இந்தக் கற்பலகையில் பராசக்தி அம்மனுக்கு உண்டான மந்திரத்தின் பீஜாட்சர எழுத்துக்களை எழுதி வைத்தவர். விசித்திரமான இத்திருக்கோயில் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. ஐந்துநிலை இராஜகோபுரம் கொண்டது. மூன்று மாபெரும் சக்திகளின் அம்சம் இந்த லலிதா செல்வாம்பிகை என்பதனை உணர்த்துவதற்கு மகா மண்டபத்தில் மூன்று திருவாயில்கள் உள்ளன.

 இதன் மூன்று கதவுகளிலும் அஷ்டலட்சுமியின் வடிவங்கள், சரஸ்வதியின் ரூபங்கள், பார்வதி தேவியின் சொரூபங்கள் என்று ரம்மியமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரே பிராகாரம் கொண்ட இத்திருக்கோயிலில் சிவாகமப்படி தினமும் பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. இங்கே பலிபீடம், சிம்ம வாகனம் மூலவரான கற்பலகை, அலங்காரத்துடன் ஒரு பீடத்தின் மேல் தரிசனம் தருகிறது. மூலவரான கற்பலகையின் முன் அன்னையின் அழகான விக்கிரக வடிவம், உற்சவர் கோலத்தில் காட்சி தருகிறது. மூலவரை உருவாக்கிய ரிஷ்யசிருங்க மகரிஷியும் சிலா வடிவில் இங்கு காட்சியளிக்கிறார்.

ஒவ்வொரு வருடமும், மாட்டுப் பொங்கல் அன்று 108 குடம் தண்ணீரை சுமந்து சென்று அம்மனுக்குச் சிறப்பாக அபிஷேகம் செய்கிறார்கள். கற்பலகை முழுவதும் மஞ்சள் பூசி, வில்வ தளங்கள் சார்த்தி வழிபடுகிறார்கள். விசேஷ தினங்களில் மட்டும்தான் இந்த அன்னையை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மற்ற நாட்களில், குறைவான பக்தர்களே வருகிறார்கள்.

தசரத மன்னருக்கு புத்திர காமேஷ்டி யாகம் நடத்த உதவிய ரிஷ்யசிருங்கர் பிரதிஷ்டை செய்த வடிவம் இந்த லலிதா செல்வாம்பிகை என்பதால், மழலைப் பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்துப் பால்பாயசம் நைவேத்தியம் செய்தால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இங்கே இருந்து வருகிறது. இத்திருக்கோயில், தினமும் காலை ஆறு மணி முதல் பதினொரு மணி வரையிலும், மாலையில் நான்கு மணி முதல் ஒன்பது மணிவரையிலும் நடை திறந்திருக்கும். திருக்கோயிலுக்குச் சென்றுவர நிறைய பேருந்து வசதிகளும் உண்டு.

- டி.எம்.ரத்தினவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்