விஐபி பூஜையறை : ‘நீயா, நானா’ கோபிநாத்
கருத்துகள்
‘‘கஷ்டம் வந்தா கடவுளைத் தேடிப்போற சாதாரண மனிதர்கள்ல நானும் ஒருத்தன். பெரும்பாலும் நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு ஊர்களுக்குப் போ கும்போது அந்தந்த ஊர்ல புகழ்பெற்ற கோயில்களுக்கு யாராவது அழைத்துச் சென்று சாமி முன்னால என்ன நிக்க வெச்சிடுவாங்க. நான் விரும்பினா லும் விரும்பாவிட்டாலும் தன்னை வந்து தரிசிக்க வைத்துவிடும் அந்தக் கடவுளர்களை பிரமிப்போடு பார்ப்பேன். என்னோட குல தெய்வம் புதுக்கோட் டைக்கு அருகில் உள்ள கரம்பக்குடி வேம்புஐயன். வீட்டில எந்த விசேஷம்னாலும் குடும்பத்தோட அங்க போய் அவரை தரிசிச்சு விசேஷ பூஜைகள் செஞ்சுட்டு வருவோம். பொங்கல் பண்டிகை சமயம் வீட்டில் நடுவீட்டுச் சாமி எனும் வழிபாட்டை செய்வோம்.
அன்று வீட்டில் முன்னோர்கள் படங்களை பூஜையறையில் வைத்து வகைவகையான உணவு வகைகளை படைப்போம். இந்த வருடம் பூஜையின் போது என் பெண் சாமிக்குப் படைக்கப்பட்டிருந்த உணவு வகைகளின் பெயர்களைக் கேட்டுக் கொண்டே வந்தாள். திடீரென முன்னோர்களின் புகைப் படங்களைக் காட்டி, ‘இவர்கள் யார்?’ என்று கேட்டபோது நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். நம் முன்னோர்களைப் பற்றி, நம் வம்சாவளியினர் அறியவே இம்மாதிரி பண்டிகைகள் உள்ளன என்பதை அறிந்தேன். அந்தப் புகைப்படத்திலிருந்தவர்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அவளுக்குப் புரியும் வகையில் விளக்கிச் சொன்னேன். புகைப்படமாகிப் போன முன்னோர்கள் என்னைப் பாராட்டுவது போலவே உணர்ந்தேன்.
சின்ன வயசிலேயிருந்தே ‘உனக்காக வேண்டிக்கொள்ளக் கூடாது. எல்லோருக்காகவும்தான் வேண்டிக்கணும்’ என்ற ஆன்மிக உணர்வோடு நான் வ ளர்க்கப்பட்டேன். அதனால பிறருக்காக நாம் வேண்டிக்கிட்டா நமக்கானதை கடவுள் தருவார்ங்கறது என்னோட தீர்மானமான எண்ணம். புத்தரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் பிடிக்குங்கற காரணம் எல்லாம் எனக்குத் தெரியாது. என் வீட்டு பூஜையறையில ஆலிலை கண்ணன், மதுரை மீனாட்சி, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ் வரர், பிள்ளையார், லட்சுமிகுபேரர், மூகாம்பிகை என எல்லா தெய்வங்களும் என்னோட நல்ல முயற்சிகளுக்கு ஆசி வழங்கிக்கிட்டு வீற்றிருக்காங்க.
என்னைப் பொறுத்தவரை நான் வண்டியிலே போகும்போது, ‘பார்த்து, பத்திரமா போப்பா’ன்னு சொல்றவங்களைக் கூட நான் கடவுளாத்தான் நினைப்பேன். இந்த உலகம் அன்பாலே நிறைந்திருக்குங்கறது என்னோட நம்பிக்கை. நானே அன்பால நிரப்பப்பட்டிருக்கிறேன்னு நம்புறதே என் ஆன்மிகம். ஒவ்வொருத்தரும் ஒரு வேலைக்கான கருவியாக இந்த உலகில் உருவாக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், சிலர் ஆயுதமாக மாறிவிடுவதைப் பார்க்கும்போது மனசு வலிக்கிறது. கோயில் உண்டியல்ல காசு போடற வழக்கம் எனக்கு இல்லை; நிஜமாகவே முடியாதவர்களுக்கு அந்தக் காசை தருவேன். கூட இருக்கறவங்களுக்கு உதவுவதும் நல்வழிகாட்டுவதும்தான் உண்மையான கடவுள் சேவை என்பதே என் ஆன்மிக வழிபாடு.
-ந.பரணிகுமார்
படம்: மாதவன்


























முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!